×

சிக்கிய வியாபாரியை வைத்தே செம ‘ஸ்கெட்ச்’ கர்நாடகா குட்கா சப்ளை கும்பலை தட்டி தூக்கியது தமிழ்நாடு போலீஸ்: ஒரு டன் குட்கா, சொகுசு கார், சரக்கு வேன் பறிமுதல்

சிவகாசி: பெங்களூருவில் இருந்து சிவகாசி கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டி பகுதியில் கடந்த வாரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரை குட்காவுடன் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து சிவகாசிக்கு குட்கா கடத்தி வருவது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து சிவகாசி டிஎஸ்பி தனஞ்செயன் ஆலோசனையின் பேரில் தனிப்படை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். கைது செய்யப்பட்ட செந்தில் மூலமாக, அவரே ஆர்டர் கொடுப்பது போன்று தனிப்படை போலீசார், கர்நாடக கும்பலுக்கு குட்கா ஆர்டர் செய்து ரூ.10 ஆயிரம் முன்பணமாக செலுத்தினர். இதனை நம்பிய கர்நாடக கும்பல் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஒரு டன் குட்காவை சிறிய வகை சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு சொகுசு காருடன் சிவகாசிக்கு கிளம்பி வந்தனர்.

அனுப்பன்குளம் சந்திப்பு பகுதியில் நேற்று காத்திருந்த சிவகாசி கிழக்கு போலீஸ் தனிப்படையினர் குட்கா கடத்தி வந்த வேன் மற்றும் சொகுசு காரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து குட்கா கடத்தி வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அப்ரார் முகம்மது (33), ஹரிஷ் (29), சாஹில் (43), ஷெரீப் (28), லியாகத் (33) ஆகிய 5 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். கர்நாடகாவை சேர்ந்த குட்கா வியாபாரிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை போலீசாரை டிஎஸ்பி தனஞ்செயன் பாராட்டினார்.

The post சிக்கிய வியாபாரியை வைத்தே செம ‘ஸ்கெட்ச்’ கர்நாடகா குட்கா சப்ளை கும்பலை தட்டி தூக்கியது தமிழ்நாடு போலீஸ்: ஒரு டன் குட்கா, சொகுசு கார், சரக்கு வேன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Police ,Sivakasi ,Bengaluru ,Karnataka ,Sema ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...